Saturday, July 14, 2018

தொடர்-8 "ஹிட்லரின் எனது போராட்டம்"

Facebook Post


தொடர்-8



("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து)

.

.
"ஹிட்லரின் எனது போராட்டம்"
.

பேசா பொருளை 
பேசும் காலமாக 
யாவற்றையும் பேசும் களமாக
சிறை ஹிட்லருக்கு அமைந்தது.
சிறையிலிருந்து கொண்டு
ஹிட்லர்
எனது போராட்டம்
என்கிற உலகப் புகழ் பெற்ற
"இனம்" என்கிற விஷயத்தை 
எழுதினார்
அடிமைத்தனத்தின் 
முதுகிலேறி 
நிஜங்களின் நிலையில் 
ஹிட்லர் பயணப்பட்டார் 
அது வார்த்தைகளின்றி 
வரலாற்று மூலதனமென 
புதியதொரு வெளியை
நோக்கி
சொற்களின் திரவமாய்
தேசமெங்கும் வழிந்தோடியது.
அவரது
மனதில் வழியும் நிணத்தை
சுமக்கும் காற்றாய் 
எனது போராட்டம் 
புத்தகம் உணர்த்தியது.
அன்று
பலரின் கண்களை திறந்தது
அந்தப் புத்தகம்.
உலகை வழி நடத்தும் 
தகுதியுடையவர்கள் 
ஜேர்மனியர்கள்
அவர்களுக்கு மட்டும்தான் 
உலகை வழிநடத்த 
தகுதியுண்டு
என்று ஹிட்லர் 
புத்தகத்தில் முழங்கினார்
அது அவரை 
ஒரு உச்ச கதாபாத்திரமாக 
ஜேர்மனியர்களின்
மனக் கதவில் தட்டியது.
வெகு நுட்பமாக 
தன்னை 
ஜேர்மனியர்களுக்குள் நுழைத்தார்
யூதர்களையும் 
கம்யூனிஸ்ட்களையும் 
மிகக் கேவலமாக 
அவர்
எனது போராட்டத்தில் சாடினார்
யூதர்கள்
ரஷ்யர்கள்
மனநிலை பாதிக்கப் பட்டவர்கள் 
இல்லாத 
ஒரு யுகத்தை உருவாக்க வேண்டுமென்று 
ஹிட்லர் தனது
கருத்தை முன்வைத்தார்
புதிய திசையை
மொழியின் வலிமையில் 
மீட்டெடுத்தார்
மற்றவர்களையும் 
தனது கருத்திற்கு
உடன் படுத்தினார் 
அந்த சமயம்
இந்தியா பிரிட்டனின்
காலனியாக அடிமைப்பட்டிருந்ததை 
ஹிட்லர் தனது புத்தகத்தில் 
ரஷ்யா
ஜேர்மனியின் இந்தியாவாக 
இருக்க வேண்டுமென 
குறிப்பிட்டு 
மொழியின் நரம்புகளை 
நிலமெங்கும் வரைந்தார்.

.
-வரிகள்-
.
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின் 
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017) 
என்ற கவித் தொகுப்பிலிருந்து.
.
.

9. ஹிட்லரின் மக்கள் புரட்சி…

தொடரும்....

.
-இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்.
14-ஜூலை-2018


Friday, July 13, 2018

தொடர்-7 "ஹிட்லரின் சிறை வாழ்க்கை"


Facebook Post

தொடர்-7

("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து)

.
.

"ஹிட்லரின் சிறை வாழ்க்கை"

.
ஹிட்லரின்
குருதிக்குள்
அரசியல் மீள்தல் பெருந் தீயென
வரையப்பட்டது.
ஹிட்லர் கட்சி சின்னமாய்
"ஸ்வஸ்திகா"வை தெரிவு செய்தார்.
இலட்சியம் எதிரிகளை
அளிக்க தனித்தலைந்தது.
அரசாங்கத்தின் நிர்வாகத்திறமை
இன்மையால்தான்
நாட்டில்
வறுமையும் வேலையில்லா
திண்டாட்டமும் என
பிரச்சாரம் செய்தார்
அதிகாரத்தின் கூர்வாளாய்
அது அனைவரையும்
இன்னுமின்னும்
தின்னாது துவங்கியது.
அரசாங்கத்திற்கு எதிராய்
மக்களை தூண்டிவிட்டு
ஆட்சியை
கைப்பற்ற முயன்றார்
எனினும்
ஹிட்லரை ஒரு
பெரும் துயர் காத்திருந்தது.
அது காலத்தை அளந்தது
அரசுக்கெதிராய் செய்த
பிரச்சாரத்தில்
தோல்வியடைந்தார்
1923 இல் அரசாங்கத்தை
கவிழ்க்க முயற்சி செய்த
குற்றப் பிரிவில்
அவரும் சகாக்களும்
சிறையில் அடைத்து
5 ஆண்டுகள் தண்டனை
நிறைவேற்றியது
ஜேர்மன் அரசு.
சிறை நாட்கள்
அவருக்கு எல்லையற்ற
பறத்தலின் சிறகுகளாய் அமைந்தது.
எனினும் பின்னர்
சிறைத் தண்டனை
ஓராண்டாக்க குறைக்கப்பட்டது
முதல் கூட்டம்
நடத்திய
மூன்று ஆண்டுகளில்
ஒரு ஆளும் அரசை
பயமுறுத்தி
உயர்ந்தவர் ஹிட்லர்
அவர்
சித்தாந்தமில்லாத கட்சிக்கு
சித்தாந்தத்தை உருவாக்கினார்
அப்போதுதான்
ஹிட்லர்
சிறையிலிருந்து கொண்டு
எனது போராட்டம்
புத்தகத்தை எழுதினார்.
ரெக்கைகள்
பிய்க்கப்பட்ட பறவையாய்
எரிந்து கொண்டிருக்கும்
அவரது கணமது.
***
.
-
வரிகள்-
.
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
"
ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.
.

.8. ஹிட்லரின் எனது போராட்டம்...


.

.தொடரும்... .

..
.
.
-
இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்.
13-
ஜூலை-2018



Thursday, July 12, 2018

தொடர்-6 "அரசியல் கட்சியில் ஹிட்லர்"


Facebook Post


தொடர்-6

("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து).

.

"அரசியல் கட்சியில் ஹிட்லர்"

.
ஹிட்லரிடம்
நிசப்தத்தைக் குலைக்கும்
சக்தி நதியாய் பாய்ந்தது.
தேசிய சோசியலிஸ்ட் கட்சியில்
அப்போது நூற்றுக்கு மேற்பட்ட
உறுப்பினர்களே வகிபாகம் செய்தனர்
மாலை நேரங்களில்
யார் வீட்டு மொட்டை மாடியிலாவது கூடி
அரசை திட்டித் தீர்ப்பதே
அக்கட்சியின் போக்காக இருந்தது.
அவர்களின்
உரையாடலில் நட்சத்திரங்கள்
மௌனமாய் விழுந்தன.
1920 பெப்ரவரி 29ம் திகதி
முதல் பொதுக் கூட்டம்
ஹிட்லர் முதல் உரையை
உணர்ச்சிப் பிழம்பாய்
உடல் நடுங்க
கண்கள் கலங்க
ஆவேசத்தோடு
ஆன்மாவின் நரம்புகள்
ஊடுறுவ பாய்த்தார்
அவர் ஆற்றிய உரையில்
கட்சி ஆர்வலர்கள்
உணர்ச்சி வசப்பட்டு
அவரைக் கொண்டாடினர்.
இளம் தலைவர் ஹிட்லர்
அவரது சக்தியை அவரே
உணர்ந்த தினமது.
மேய்ப்பவனின் நிதானத்தோடு
காலங்களை உடைத்து
மனக் கிளையைத் தாவிச் சென்றது.
ஓரிரு ஆண்டுகளில்
ஹிட்லரின்
உரைக்காக மக்கள் திரண்டனர்
அவர் மக்கள் மத்தியில்
ஜேர்மனியர் மிகச் சிறந்தவர்கள்
என்பதை விதைத்தார்
அரசியலில்
தைரியமாய் நீந்தி
விதிகளுக்குள் அடங்காத
தலைமையாய் அவரை
மக்கள் ஆன்மாவிற்குள் பாய்ந்தார்..
.
-வரிகள்-
.
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.
.
.

7. ஹிட்லரின் சிறை நாட்கள்.

.
.

தொடரும்...

.
..
.
.
-இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்.
12-ஜூலை-2018




Wednesday, July 11, 2018

தொடர்-5 . . “ராணுவத்தில் ஹிட்லர்”

Facebook Post


தொடர்-5

("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து)

.

.
“ராணுவத்தில் ஹிட்லர்”

.
வாழ்வின் அதிர்வுகளிருந்து
தாளாது
இயலாமையின் மறு அமர்வு தாண்டி
ஹிட்லர்
ஜேர்மனிக்கு வந்தார்
வழியும் மீளத் திரும்பா
கனவுகளுடன்
ராணுவத்தில் சேர்ந்தார்
வாழ்வின் வெம்மையும்
போருக்கான விருப்பமும்
அவரது வயது 25
முதல் உலகப் போர் தொடங்கிய
தருணமது 1914 - 1918
ஓடுதலால் போரிடுதல் என்கிற
ரன்னர்
பணி அவருக்கு வழங்கப்பட்டது.
போரிடும் வீரர்களுக்கு
ஓடிச்சென்று
கட்டளைகளை தருவது.
இறகுகள் முளைத்த
காற்றாய்ப் பறந்தார்
நூற்றாண்டுகள் நிரப்ப முடியாத
திசையை தெரிவு செய்தார்
வெடிகுண்டுகள் முழங்கும்
போர்க் களத்தில்
வெறி பிடித்து இயங்கினார்
வெடி குண்டுகளை ஏமாற்றி
தனதெல்லாப் பொறி முறைகளையும்
பாதையாக்கிப் பாய்ந்தார்
ஹிட்லரின்
கடமையைப் பாராட்டி
Iron cross பதக்கம் அணிவிக்கப்பட்டது.
மஸ்டர்ட் வாயு வீசப்பட்டதால்
அவரின்
ஒரு கண்ணும் நுரையிரலும்
தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது.
தேசத் துரோகிகளை
குறி வைத்தார்
மருத்துவ மனையில்
அனுமதிக்கப்பட்ட
ஹிட்லர்
இது யூதர்களின்
துரோகமென
கதறி அழுதார்
கம்யூனிஸ்ட்களையும்
யூதர்களையும் வெறுத்தார்
தோல்விகளுக்கு காரணமான
அவர்களை அழிக்கப் போறனென
கர்ஜித்தார்
புதிதாக அமையப்பெற்ற
தேசிய சோசியலிஸ்ட்
கட்சியில் உறுப்பினராய்
இணைந்து கொண்டார்
ஹிட்லரின்
மிதந்து வழிகின்ற கதையில்
எப்போதுமிருக்கிறது வானத்து அரசியல் கனவு.
.
-வரிகள்-
.
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.
.
.
.

இக் கவிதை பற்றிய எனது கருத்து...

.
வாழக்கையில் அதிகம் துன்பங்களைச் சுவைத்தும் ரணங்களைப் பருகியும் பழக்கம் கொண்ட கதா(தை)நாயகன் வியென்னாவில் இருந்து ஜெர்மனி நோக்கி தனியாக படையெடுக்கின்றனர் தனது கனவுகள் படை சூழ.
அவரது கனவுகள் சுமந்த முடிவு அவரது 25வது வயதில் 1914ம் வருடம் அவரை இராணுவத்தில் இணைக்கிறது. "செலவோடு செலவாக செருப்பும் ஒரு ஜோடி" என்ற பழமொழி போல ரணங்களோடு ரங்களாக இத்தனையும் சுவைத்து விடலாம் என்று எண்ணம் கொண்டாரோ இல்லை "முயற்சி திருவினையாக்கும்" என்ற பழமொழிக்கு ஏற்ப பின்னைய காலத்தில் வரலாற்றில் தனக்கென அழியா இடமுண்டு என்பதை முன்பே கணித்து திட்டம் கொண்டாரோ! எதுவாக இருந்தாலும் தெளிவாக எதுவும் தென்படவில்லை. தற்போது புலத்திற்கு தெரிவது ஹிட்லர் இராணுவத்தில் இணைந்தார் என்ற செய்தி மட்டுமே.
முதலாம் உலகப் போர் காலத்தில் போர்க்களத்தில் தகவல் பரிமாறும் அல்லது தகவல் தொடர்பாடல் கருவியாகவே அவரின் பணி இருந்தாலும் அவர் சலிப்பின்றி சிரிப்போடு செய்ததன் விளைவும், அவரது சாமர்த்திய சிந்தனையும் அத்தொழிலை அவரின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் திட்டத்திற்குமென திட்டமிடச்செய்தது போலும்.
அதன் பிரதிபலிப்பே அணுகுண்டு வீச்சில் கண்ணும் நுரையீரலும் பாதிக்கப்பட்ட பின்பும் தேச துரோகிகளை அழிப்பது என்ற எண்ணம் மேலோங்கியதும் அரசியலின் புதிய பங்காளியாய் இணைவதும் என்ற கவிஞரின் வரிகள் மூலம் இலகுவாகவே எம்மால் உணர முடியும்.
அவரது அரசியல் பயணத்தினையும் அதன் அடைவு முன்னேற்றத்தையும் அறிய கவிஞரின் வரிகள் அடுத்த பாகத்திற்கு எம்மை அழைத்துச் செல்கிறது.
.
.

6. அரசியல் கட்சியில் ஹிட்லர்.
.
.
தொடரும்...

.
.
குறிப்பு: 1. இலக்கியர்களே! எழுத்துப்
பிழைகள், பொருட் பிழைகள்
ஏதேனும் இருப்பின் முதற்கண்
தயவுடன் என்னை மன்னியுங்கள்.
அத்தோடு நின்று விடாமல்
பிழைகளையும் சற்றே தெளிவு
படுத்தி விடுங்கள்.
.
2. முழுக்க முழுக்க எனது
சிந்தனைகளுக்கு உதயமான
விடயங்களை வைத்து மட்டுமே
விவரணம் செய்யத்துளேன்.
.
.
.
-இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப் இன் கருத்து.
11-ஜூலை-2018


Tuesday, July 10, 2018

தொடர்-4 . “ஓவியர் ஹிட்லர்.”



Facebook Post


தொடர்-4

("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து)

.
.

“ஓவியர் ஹிட்லர்.”

.
ஹிட்லரின்
வாழ்வில் ரணங்கள் அமர்கிறது. அரசாங்கத்தின் உதவிப்பணம் கிளாராவை வந்தடைந்த நேரமது ஹிட்லர் ஓவியராகும்
தீரா ஆசையின் பெரும் தீ ஆஸ்திரியாவின் வியன்னாவிற்கு
ரயிலேறி வந்தார்
புதிய தேசம் காத்துக்கிடந்தது
ரயிலேறும் போது
நினைத்திருப்பாரோ ஹிட்லர்
ஜேர்மனியின் வரலாற்றுப்
புத்தகத்தில்
தனக்கென்று சில பக்கங்களிருப்பதை.
ஆனால்,
Art Academy நுழைவுப் பரீட்சையில் ஹிட்லர்
தோல்வியடைந்தார்
சற்றே இடறினார்.
அந்த தருணமொன்றில்தான்
தாய் கிளாரா
47வது வயதில்
மார்பக புற்று நோயால் இறந்து போகிறார்.
தாய் கிளாராவின்
மொழியும் தாலாட்டுமில்லாத
பொழுது நிர்வாணமாய்க் கிடந்தது.
அவமானங்களும் தோல்விகளும்
மிகப் பெரிய சாதனையென
அவரின் இளமைக் காலத்தை நிரப்பினார்.
தாயின் சேமிப்பு
ஒரு வீடு கிடைக்கிறது.
உதவிப் பணத்திற்காய்
பொய்யான செர்ட்டிபிகேட்
தயாரித்து
ஹிட்லரின் கில்லாடித்தனமும்
அங்கு பயணப்பட்டது.
ஓவிய அட்டைகள் தயாரித்தார்
பிழைப்பு அதுவென இருந்தது
இரவில் மண்ணெண்ணை
விளக்கு வெளிச்சத்தில்
ஓவியங்கள் வரைவது
அவருக்குப் பிடித்திருந்தது.
ஹிட்லரின்
தூரிகைகளுக்குள் மொடல் அழகிகள்
விழுந்தனர்
அதனால் விற்பனையில்
உச்சமடைந்தார்
சொந்தமான ஓவியகூடம்
உருவாக்கினார்
இந்த கணமொன்றில்தான்
சிந்தியாவை காதலிஷம் கொண்டு
அதில் தோல்வியுமடைந்தார்
பின் அவசியப்படாத
நாடோடி வாழ்க்கையில்
இருள் வெளி வசிக்கலாயினது.
எனினும் புதிய பாதையை
தெரிவு செய்தார்
அது எதிரியை மிரட்டும்
ராணுவ சோல்ஜர்.
.
-வரிகள்-
.
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.
.
.
.
இக் கவிதை பற்றிய எனது கருத்து...
.
ரணங்களையும் கஷ்டங்களையும் தோளில் சுமந்தால் தான் வரலாறு பேசும் தலைவனாக ஆகமுடியும் என்று ஹிட்லரின் வாழ்க்கை கற்றுத் தருவது போல் அமைகிறது. சிறுவயதிலேயே சகோதரர்களின் இழப்பு, தந்தையின் கொடுமை, கல்வியில் வீழ்ச்சி, தாயின் மறைவு, Art Academy நுழைவுத்தேர்வில் தோல்வி என 25வயது கூடப் பூர்த்தியாகாத ஒரு இளைஞனால் எத்தனை ரணங்களை சுமக்க முடியும் என்று இன்னும் எனது எண்ணங்கள் கேள்வி எழுப்புகின்றன.
.
Art Academy பயிற்சி பெரும் பாக்கியம் கிடைக்காதது அந்த Academyக்கு தான் இழப்பு என்பது போல இருந்தது காவிய நாயகனின் தொழில் முழுநேர ஓவியராக திகழ்ந்ததும், அதன் மூலம் அவரின் வருமானம் அதிகரித்ததும், சொந்தமான ஓவியக்கூடம் உருவாக்கியதும்..
.
காவிய நாயகனின் பிற்காலங்களில் அவரின் தந்துரோபாயங்கள் புதிதாக அவர் கற்றுக் கொண்ட விடயம் அல்ல என்பதற்கும் அது அவரது பிறப்பியல்பு என்பதற்கும் "பொய்யான செர்டிபிகேட் தயாரித்து, ஹிட்லரின் கில்லாடித்தனமும் அங்கு பயணப் பட்டது" என்று கவிஞர் கூறிச் செல்லும் வரிகள் சான்றாக விளங்குகின்றது.
தன் தாயை இழந்த காவிய நாயகன் ஈடு செய்ய முடியாத அந்த இழப்பினை எவ்வாறு தாங்கிக்கொண்டான் என்ற ஒரு அனுதாபக் கேள்வி என்னுள் வந்துசெல்கிறது "தாய் கிளாராவின்
மொழியும் தாலாட்டுமில்லாத
பொழுது நிர்வாணமாய்க் கிடந்தது" என்று பாடும் கவிஞரின் மொழித் திறமையை கடந்து செல்கையில்.
அவரும் மனிதன் தானே... அவரும் ஆண் மகன் தானே... அவருக்கும் காதல் வரலாம் தானே... அதில் என்ன தவறுள்ளது.
தொடர் தோல்விகளுள் இன்னுமொன்று தானாகவே இணைந்து கொள்கிறது, இல்லையென்றால் வளமை போல இவர் விரும்பாத போதும் காதலி சிந்தியா மூலம் காலம் அந்த தோல்வியினை அவரினுள் புகுத்திச் செல்கிறது.
இருள் நிறைந்த அவரது வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக புதியதொரு சூழலை தேடித் செல்வதாக கவிஞரின் அடுத்த பாகம் விரிகிறது...
.
.
5. ராணுவத்தில் ஹிட்லர் வாழ்வின்
.
.
தொடரும்...
.
.
குறிப்பு: 1. இலக்கியர்களே! எழுத்துப்
பிழைகள், பொருட் பிழைகள்
ஏதேனும் இருப்பின் முதற்கண்
தயவுடன் என்னை மன்னியுங்கள்.
அத்தோடு நின்று விடாமல்
பிழைகளையும் சற்றே தெளிவு
படுத்தி விடுங்கள்.
.
2. முழுக்க முழுக்க எனது
சிந்தனைகளுக்கு உதயமான
விடயங்களை வைத்து மட்டுமே
விவரணம் செய்யத்துளேன்.
.
.
.
-இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப் இன் கருத்து.
10-ஜூலை-2018


Monday, July 9, 2018

தொடர்-3 “கல்வியில் மந்தம் ஹிட்லர்”



Facebook Post



தொடர்-3
("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து)
.

.

“கல்வியில் மந்தம் ஹிட்லர்”

.
ஹிட்லரை
தந்தை அலய்ஸ ஹிட்லர்
வீட்டிலிருக்கும்
நாயோடு ஒப்பீடு செய்தார்.
அக்கணங்களில்
துயர்தல் கிளைத்து நீண்டு
வாழ்க்கை இருளின்
பக்கங்களாய் மாறியது.
கல்வியில்
சாதித்த ஹிட்லர்
ஆறாம் வகுப்பில்
தொய்வு கொண்டார்
அதற்கு
குடிகார தந்தையின்
மிருக நிலைகள்
அவரைக் கடந்து
செல்கின்றமையும் ஒரு சூழல்.
22ம் நூற்றாண்டின் தத்துவவியலாளர்
லுட்வக் விட்ஜென்ஸ்டின்
ஹிட்லரைவிட
இரண்டு வகுப்புகள்
மேலே படித்தார்
கல்வியில்
விருப்பமின்மைக்கு
ஹிட்லருக்குள் வளர்ந்த
ஓவியக் கனவுமொன்று.
போர்கள் பற்றியதான
நாவல்களை தேடியலைந்து
வாசித்தார்
சுங்க அதிகாரியான தந்தை
அலய்ஸ ஹிட்லர்
03 ஜனவரி 1903 அன்று
உயிர் திறந்தார்.
ஹிட்லரின்
வாழ்வில் வலியின்
பக்கங்கள் தலை நீட்டியது.
பரவியிருந்த இருளில்
மீண்டும் கண்ணீர் துளிர்த்தது.
16ம் வயதில்
டிப்ளோமா பட்டம்
பெறா நிலையில்
மிகத் தற்செயலாய் வெளியேரினார் ஹிட்லர்.
.
.
-வரிகள்-
.
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.
.
.
.

இக் கவிதை பற்றிய எனது கருத்து...


இக்கவியின் ஆரம்ப வரிகளை வெறுமனே கடந்து செல்ல முடியாதிருந்தது.
“உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை” என்றுதான் உவமைகளும் ஒப்பீடுகளும் அமையவேண்டும் என்பது தமிழன்னையின் தூண்களிலொருவரான தொல்காப்பியர் வாக்கு.
ஆனால் கோபமும் மிருகத்தனமும் அதிகரிக்கும் சமையங்களில் உயர்ந்ததோடு மட்டுமல்லாது தாழ்ந்ததோடும் ஒப்பிட முடியும் என்ற, கம்பராமாயணத்தில் இடம்பெற்ற "சிங்கக் குருளைக்கு இடுதீம் சுவை ஊனை,
நாயின் வெங்கண் சிறுகுட் டனை ஊட்ட விரும்பினாளே!" என்ற இலக்குவணனின் கோபத்தை எடுத்தியம்பும் மேலே கூறப்பட்ட வார்த்தைகள் நினைவுக்கு வந்து செல்கிறது காவிய நாயகனின் தந்தையே நாய்க்கு ஒப்பிடும் வார்த்தைகளைப் படிக்கும் போது.
கல்வியில் சற்றுத் தளர்வு கண்ட நாயகன் தன்தந்தையையும் இழக்கிறார். வெறுப்புகள் மட்டுமே தந்தை மீது படர்ந்திருந்தாலும் இரங்கல் செய்தி கேட்ட பின்னர் காவிய நாயகன் சற்றுக் கலங்கியிருக்கக் கூடும் என்பது எனது எண்ணத்தில் உதிக்கின்றது. காரணம் இப்போதுதான் கவியநாயகன் 14 வயதைக் கடந்து விட்டாரே.
தந்தையின் இறப்பு சற்றே கலக்கத்தை ஏற்படுத்திருப்பினும் அவரின் வாழ்க்கைப் பக்கங்களில் பரவியிருந்த இருளில் மீண்டும் கண்ணீர் துளிர்த்ததாக கவிஞர் கூறுவது தனது அரியவகைச் செல்வங்களான அம்மாவையும் தங்கையையும் எவ்வாறு கரை சேர்ப்பது என்ற எண்ணமுமாக இருக்கக் கூடும். ஏனெனில் எமது நாயகன்தான் ஆண்மகனாயிற்றே.
கல்வியில் உயர்வு நிலையினை அடையவில்லையெனினும் அவர் உச்சத்தினை அடைந்தது பற்றி தொடர்ந்து வரும் ஆக்கங்கள் எமக்குக் கற்றுத்தரும் என்பதில் சந்தேகமில்லை.
.

.
4. ஓவியர் ஹிட்லர்
.
.
தொடரும்...
.


.
குறிப்பு: 1. இலக்கியர்களே! எழுத்துப்
பிழைகள், பொருட் பிழைகள்
ஏதேனும் இருப்பின் முதற்கண்
தயவுடன் என்னை மன்னியுங்கள்.
அத்தோடு நின்று விடாமல்
பிழைகளையும் சற்றே தெளிவு
படுத்தி விடுங்கள்.
.
2. முழுக்க முழுக்க எனது
சிந்தனைகளுக்கு உதயமான
விடயங்களை வைத்து மட்டுமே
விவரணம் செய்யத்துளேன்.
.
.
.
-இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப் இன் கருத்து.
9-ஜூலை-2018



Sunday, July 8, 2018

தொடர்-2 "ஒரு தந்தையின் கொடுமை"

Facebook Post



தொடர்-2 
("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து)


"ஒரு தந்தையின் கொடுமை"


ஹிட்லரின் இளமைப் பருவமது
இரண்டாம் பெரிய தாய்
இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.
ஹிட்லரின்
சூரியன் கறுப்பு நிறத்தால்
வடிவமைக்கப்பட்டு
நிசப்தம் குலையும் நேரமது
அவளது மனக் குடுவையிலிருந்து
கோபம்
ஹிட்லரையும்
அவரது சகோதரி பவுலாவையும்
கூரிய நகங்களாய்ப் தின்றது.
யுகயுகமாய்
அவரது தாயே
தவமெனக்கிடந்த
தந்தை அலய்ஸ் ஹிட்லர்
தாய் கிளாராவை துன்புறுத்தும் தருணங்களில்
தந்தையை வெறுத்தார்
அவமானத்தால் அழுதார்
மௌனித்திருக்கும்
தன் தாய் மீது
பாசத்தின் பிரதியைக் கொண்டாடினார்
ஏழு வயது சிறியவளான
தங்கை பவுலா
பருவ வயதையடைந்தாள்
அவரது தந்தையின்
வெறி கோரமடைந்து
மேய்ப்பாளனான அவர்
மிருகமாய்
முடிவுறா கோபங்களை
மீண்டும் மீண்டும்
ஓதினார்
பல சொற்கள்
அங்கு நிர்வாணமாய்க் கிடந்தது.
காலங்கள் உடைந்து
அவரது பாதை
காயங்களால் ஆனவை
என்கிற குறிப்பை
ஹிட்லரின்
மெயின் கேம்ப்
சுய சரிதையின்
பதிவேடு நூற்றாண்டுகள் வாழ்ந்து
சாட்சி சொல்கிறது
இருளைப் பற்றியபடி.

-வரிகள்-

கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.


இக் கவிதை பற்றிய எனது கருத்து...


தொடர்-1 றிலே "இந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே" என்ற வாசகத்தினை சுட்டிக் காட்டியிருந்தேன். இந்தத் தொடரில் மேற்கூறிய வாசகத்தின் தொடர்ச்சியினையும் ஞாபகமூட்டி விடுகிறேன்.
"அது நல்லவராவதும் கெட்டவராவதும் அன்னை வளர்ப்பினிலே" இதுவே அந்த வாசகத்தின் தொடர். இந்த வாசகத்தினை எழுதிய கவிஞர் அன்னை என்ற சொல்லோடு தந்தை, மற்றும் சூழலின் தாக்கம் என்ற சொற்களையும் மறைமுகமாகவே சொல்லி இருக்க வேண்டும். ஏனெனில் அன்னையின் வாசமறியாத நல்லவர்களும் உள்ளார்கள், நேர்த்தியான வளர்ப்பினைக் கையாண்ட அன்னையின் வளர்பிலான கெட்டவர்களும் உள்ளனர்.
ஹிட்லருக்கு மாத்திரமல்ல எவருக்கும் இவ்வாறு நடந்திருக்கக் கூடாது. அதவாது ஹிட்லரின் தந்தை பலதார மணமுடித்தது அல்ல, மாறாக சம உடமை அல்லது சம உரிமை கொடுக்கப் படாதது.
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற முன்னோர் கூற்று உண்மையாவது போல் அமைகிறது காவிய நாயகனின் 2வது பெரிய தாயின் அதே கோபம் அவரது தந்தையிடத்திலும் பிரதிபலிப்பதிலிருந்து.
எந்தப் பிள்ளையும் தனது தந்தையின் அரவணைப்பினையும் அன்பினையும் அதிகம் விரும்பும். அது கிடைக்காத சந்தர்ப்பங்களில் அல்லது அதற்க்கு மாற்றமாக கிடைக்கும் நேரங்களில் சகித்துக் கொள்ள அல்லது பொறுத்துக் கொள்ள கற்றுக் கொள்ளும். அதே குழந்தை தன் தந்தை தனது தாயினை துன்புத்தும் போதோ அல்லது தனது தாயினை தரக் குறைவாக நடத்தும் போதோ அதனை ஏற்றுக் கொல்வதுமில்லை வெறுமனே வேடிக்கை பார்த்து நிற்பதுமில்லை என்பதற்கு கவிஞர் கூறும் "தந்தையை வெறுத்தார், அவமானத்தால் அழுதார்" என்ற வரிகள் சுட்டிக் காட்டுகிறது.
அதுமட்டுமல்லாமல் "மௌனித்திருக்கும் தன் தாய் மீது பாசத்தின் பிரதியினைக் கொட்டினார்" என்ற வரிகள் காவிய நாயகனின் கனிவுள்ளத்தினை எமக்கு படம்போட்டுக் காட்டுகிறது.
ஹிட்லரின் பின்னைய காலத்து வாழ்க்கையில் அவரின் கடினமான வார்த்தைகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் அவரின் தந்தையின் வாயிலிருந்து வடிந்து அவரின் சூழல் முழுக்க பரவிக்கிடந்த நிர்வாணமான சொற்களும் காரணமாக இருக்கலாம் என்பதற்கு நூற்றாண்டுகளாக வாழ்ந்து கிடக்கும் "ஹிட்லரின் மெயின் கேம்ப்" என்ற சுயசரிதை மட்டும் சான்றல்ல. இனிவரும் நூற்றாண்டுகளுக்கு வாழப் போகும் {"ஏ. நஸ்புள்ளாஹ் வின் ("ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்")} என்ற நூலும் சான்றாக வாழும்.
மேலும், நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாத பிரச்சினைகள் வரும் போது உலகமே இருண்டு விட்டதே என்றுதான் அதிகமாக அழுது புலம்புவோம், ஆனால் இங்கு ஹிட்லருக்கு சிறுவயதிலேயே ஏட்பட்ட பிரச்சனைகளை "ஹிட்லரின் சூரியன் கறுப்பு நிறத்தால் வடிவமைக்கப்பட்டு நிசப்தம் குலையும் நேரமது" என்ற வரிகள் மூலம் கவிஞர் எடுத்தியம்புவது சுவாரஸ்யமானது மட்டுமல்ல மேட்கொண்டு பயணிக்க எமக்கு உத்வேகமளிக்கிறது.
இனிதே நகரும் இந்தக் கவிக் காவியத்தின் அடுத்த பாகம் ஹிட்லரின் கல்வி பற்றியது.


3. கல்வியில் மந்தம் ஹிட்லர்.

தொடரும்...


-இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப் இன் கருத்து.
8-ஜூலை-2018



Saturday, July 7, 2018

தொடர்-1 "குழந்தை ஹிட்லர்"

Facebook Post


தொடர்-1
("ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" இலிருந்து)

"குழந்தை ஹிட்லர்"

சரித்திர வீரர்
ஹிட்லர்
வெண்ணிறப் பறவை
காஸ்தாப் ஜூம் பொம்மர் நகரத்தில்
அலய்ஸ ஹிட்லரின்
மூன்றாம் மனைவி
கிளாரா போல்ஸிக்கு
ஆறு குழந்தைகளில்
நான்காம் குழந்தையாய் பிறந்தார்.
மிரட்டும் கண்கள்
சாம்பல் நிறப் பார்வை
பூமியை
ஆளும் ஆன்மம்
சகோதரம்
நால்வர் சிறுவயதிலயே இறந்துவிட்ட
அந் நாளில்
அதன் துயரத்தை
பகிரத்தெரியாத பருவம்.
நாயகன்
அடால்ப் ஹிட்லரும்
கடைசி தங்கை
பவுலா ஹிட்லர் இருவருக்குமாக
எதிர்காலமொன்றுக்கான
கேள்விகள்
அவர்களிடம் இருந்தது.
ஹிட்லரின் குறும்பில்
பவுலா சிரித்துக் கொண்டிருந்தாள்.
சகோதரன்
நாளை பூமியின்
நரப்புகளை இசைப்பான்
என்கிற சரித்திரம் தெரியாமல்.
-வரிகள்-
கவிஞர் ஏ.நஸ்புள்ளாஹ் அவர்களின்
"ஹிட்லர் சிலருக்கு பிடிக்காத பெயர்" (2017)
என்ற கவித் தொகுப்பிலிருந்து.


"குழந்தை ஹிட்லர்" கவிதை பற்றிய எனது பார்வை.


"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே" என்ற வாசகமே நினைவிற்கு வருகின்றது.
சகோதரர்கள் இறந்த செய்தியினையும் அதன் இழப்பின் தாக்கத்தினையும் அறிந்து விளங்கமுடியாத பருவத்தில் தன் தங்கையினை மகிழ்விக்க குறும்பு செய்யும் எமது காவிய நாயகன் யாருமே துள்ளியமாக கணிக்க முடியாத எதிர்காலத்தில் பெரும்பாலானவர்களிடம் கெட்ட பெயரைத்தான் சம்பாதிக்கப் போகின்றான் என்பதை நாயகனின் குறும்பில் மகிழ்ந்த தங்கை மட்டுமல்ல காவிய நாயகன் குழந்தை ஹிட்லர் கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இக் கவியில் கவிஞரின் "நாளை பூமியில் நரப்புகளை இசைப்பான்" என்ற வார்த்தை ஜாலம் இலக்கிய வாசம்/ ஞானம் குன்றிய என்னை அடுத்த கவித் தொடரினுள் ஆர்வமிகுதியுடன் நுழைந்து விட அழைப்பு விடுக்கின்றது.
2. ஒரு தந்தையின் கொடுமை.
கவிஞர் நஸ்புள்ளாஹ். ஏ. அவர்களின்
-இது-
முஹம்மது இம்ரான் அஷ்ரப் இன் கருத்து.
7-ஜூலை-2018





Thursday, July 5, 2018

கவிஞர் ஏ.நஸ்புள்ளாஹ் அவர்களின் 7வது நூல் பற்றிய விளக்கத் தொடர்.


Facebook Post


படைத்துப் பரிபாலித்துக் காக்கும் எல்லாம் வல்ல நாயனவன் பெயர் கொண்டே ஆரம்பம் செய்கிறேன்.

கிழக்கிலங்கையில்  அனைவரினாலும் அறியப்பட்ட அனைத்து வளங்களும் அடங்கப் பெற்ற ஒரு நகரமே கிண்ணியா. கிண்ணியாவில் நிறைந்து காணப்படும் வளங்களுள் இலக்கிய வளத்தினது ஆதிக்கமும் அளப்பெரியது என்றால் அது மிகையில்லை. இதற்கு கலாபூசணம் ஜனாப் முஹம்மது அலி, கிண்ணியா அமீரலி, ஐயா கௌரிதாசன் போன்ற  மூத்த கலைஞர்களும் ஜனாப்  சபருல்லாஹ் காசீம், ரா. பா. அரூஸ், ஏ.கே.முஜாராத், பிரோஸ்க்கான்  போன்ற முதிர்ந்த கலைஞர்களும் திருவாளர்களான நாசர்   இஜாஸ், குஞ்சிமுட்டி சோறு புகழ் முஹம்மது  நஸீம் போன்ற வளர்ந்து வரும் கலைஞர்களும் மற்றும் இவ்விடத்தில் பெயர் குறிப்பிடப் படாத பல கலைஞர்களும் சான்றாக அமைக்கின்றனர்.

மேலே பெயர் குறிப்பிடப் படாதவர்கள் உட்பட அனைவரும் கிண்ணியாவின்  இலக்கிய பணியில் பெருமளவு பங்காளிகளாகவே திகழ்கின்றனர்.
மேலே பெயர் குறிப்பிடப் படாதவர்களுள் மிக முக்கியமான ஒருவர்தான் ஜனாப். ஏ. நஸ்புள்ளாஹ் அவர்கள். இவரை விடுத்து கிண்ணியாவின் இலக்கிய வரலாற்றை தொகுத்து விட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

கலாபூசணம் ஜனாப் முஹம்மது அலி அவர்கள் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் கீழே மேற்கோள் இட்டுக்கட்டிய வரிகள் மூலம் கிண்ணியாவில் இலக்கிய வரலாற்றின் நவீன கவி புனைவதிலும் கவிஞர் நஸ்புள்ளாஹ் அவர்களின் பங்கினை இலகுவாக அறிய முடிகிறது.

"முஜாரத், நஸ்புள்ளா
இவ்விரு கவிதை மகன்களின் கவிதை நகர்ச்சியில் முதிரச்சி தெரிகிறது. அத்துடன் நவீன பாவுக்கான அழகியலும் விரிகிறது." (கலாபூசணம் ஜனாப் முஹம்மது அலி அவர்களின் பின்னூட்டம்)

1974ம் வருடம் கிண்ணியாவில் பிறந்த ஜனாப் ஏ. நஸ்புள்ளாஹ் அவர்கள் கிண்ணியா அரபா மகாவித்தியாலயத்தில் தனது கல்வியினை தொடர்ந்த இவர் உயர்தரம் வரை கல்வி கற்று தற்போது நீர் வளங்கள் மற்றும் வடிகால் அமைப்புச் சபையில் கடமையாற்றி வருகின்றார். அவர் தனது தொழிலிலும் பார்க்க இலக்கியத்தினையே அதிகமாக நேசித்து இருக்கின்றார் என்பது அவரை அறிந்த அனைவரும் அறிந்ததொன்றே. அவரைப் பற்றி அறிந்திராத மற்றும் தெரிந்திராத அனைவருக்கும் கீழே இலக்கங்கள் குறிக்கப்பட்டு சுட்டிக்காட்டப் பட்டுள்ள அவரது படைப்புகள் விளக்கமளிக்கும்.

(கவிஞர் ஜனாப் ஏ.நஸ்புள்ளாஹ் அவர்களது புனைவில் உண்டான வெளியீடுகள்)
1. துளியுண்டு புன்னகைத்து - 2003
2. நதிகள் தேடும் சூரிய சவுக்காரம் - 2009
3. கனவுகளுக்கு மரணம் உண்டு - 2011
4. காவி நகரம் - 2013
5. ஆதாமின் ஆப்பிள் - 2014
6. இங்கே சைத்தான் இல்லை - 2015
7. ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர் - 2017
8. மின்மினிகளின் நகரம் - 2017
9. ஆகாய வீதி - 2018

மேட்குறிப்பிட்ட தொகுப்புக்கள் மாத்திரமின்றி இதுவரை தொகுக்கப் படாமல் உள்ள இன்னும் பல கவிதைகளையும் இவர் படைத்துள்ளார். அதுமட்டுமன்றி இவரது காவி நகரம் என்ற சிறுகதைத் தொகுதிக்கு பேனா பதிப்பகத்தின் 2014ம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டது.

மேலும், சிறிதும் தலைக்கனம் அற்றவரான இவர் ஏனைய கவிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளின் படைப்புக்களை விவரணம் செய்வது, ஏனையோருக்கு எடுத்தியம்புவது போன்ற ஊக்குவிப்புக்களை செய்வது மட்டுமல்லாமல் வாழ்த்துவதற்கும் தவறி விடவில்லை.

இப்பதிவின் தொடர்ச்சியாக பல தொடர்களுக்கு 2017ம் வருடம் தனது 7வது நூலாக  இவரினால் வெளியிடப்பட்ட "ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" என்ற கவிதைத் தொகுதியின் கவிதைகளையும் ஒரு வாசகனாக அவற்றிற்கான எனது விமர்சனங்களையும் தொகுத்து வழங்கவுள்ளேன்.

கவிஞர் ஜனாப் ஏ. நஸ்புள்ளாஹ் அவர்கள் இந்நூலினுள் நுழையும் முன்பதாக தனது 7வது நூலிற்காக உதவியவர்களினை மறந்து விடாமல் மனித இயல்பினில் மிகவும் போற்றத்தக்க விடையமான நன்றி நவிழ்த்தலுடனேயே எம்மை உள்ளே அழைத்துச் செல்கிறார்.

(நூலினூடாக நன்றி நவிழ்தலில் குறிப்பிடப் பட்ட பெயர்கள் "தோழர் பழனி நித்யன் (இந்தியா), ஜே.பிரோஸ்க்கான், கிண்ணியா சபருல்லாஹ், ஏ.எம்.எம்.அலி, ஏ.சீ.எம்.இப்ராஹீம் (சட்டத்தரணி), எம்.எம்.அலி அக்பர், கலாநிதி கே.எம்.எம்.இக்பால் மற்றும் நூலகர் எம்.ரீ.சபருல்லாஹ்கான், நேயம் நியாஸ், வீ.எம்.றைஸ்த்தீன், ஏ.கே.முஜாராத், நாசர் இஜாஸ், எம்.ரீ.சஜாத்.)

தொடர்ச்சியாக,
"இது எனதும் ஹிட்லரினதும் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்களுக்கு" என்ற வாசகத்தை அழுத்தமாக கூறுவதன் மூலம் பாத்திர நாயகன் ஹிட்லரை வேறு கோணத்திலிருந்து கண்காணித்து விவரித்து கவிகளை வடித்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

ஹிட்லரின் சிறுபராய வாழ்க்கையை நாம் அனைவரும் அறிந்தே ஆக வேண்டும் என்ற நோக்கிலோ என்னமோ முதல் தலைப்பாக "குழந்தை ஹிட்லர்" என்று தனது முதலாவது அத்தியாயத்தை மன்னிக்கவும் ஹிட்லரின் முதலாவது அத்தியாயத்தை ஆரம்பம் செய்துள்ளார்.

"குழந்தை ஹிட்லர்"

தொடரும்...


குறிப்பு: 1. இலக்கியர்களே! எழுத்துப் பிழைகள், பொருட் பிழைகள் ஏதேனும் இருப்பின் முதற்கண் தயவுடன் என்னை மன்னியுங்கள். அத்தோடு நின்று விடாமல் பிழைகளையும் சற்றே தெளிவு படுத்தி விடுங்கள்.

2. முழுக்க முழுக்க எனது சிந்தனைகளுக்கு உதயமான விடயங்களை வைத்து மட்டுமே விவரணம் செய்யத்துளேன்.

-விவரணம்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
05-ஜூலை-2018.