Thursday, July 5, 2018

கவிஞர் ஏ.நஸ்புள்ளாஹ் அவர்களின் 7வது நூல் பற்றிய விளக்கத் தொடர்.


Facebook Post


படைத்துப் பரிபாலித்துக் காக்கும் எல்லாம் வல்ல நாயனவன் பெயர் கொண்டே ஆரம்பம் செய்கிறேன்.

கிழக்கிலங்கையில்  அனைவரினாலும் அறியப்பட்ட அனைத்து வளங்களும் அடங்கப் பெற்ற ஒரு நகரமே கிண்ணியா. கிண்ணியாவில் நிறைந்து காணப்படும் வளங்களுள் இலக்கிய வளத்தினது ஆதிக்கமும் அளப்பெரியது என்றால் அது மிகையில்லை. இதற்கு கலாபூசணம் ஜனாப் முஹம்மது அலி, கிண்ணியா அமீரலி, ஐயா கௌரிதாசன் போன்ற  மூத்த கலைஞர்களும் ஜனாப்  சபருல்லாஹ் காசீம், ரா. பா. அரூஸ், ஏ.கே.முஜாராத், பிரோஸ்க்கான்  போன்ற முதிர்ந்த கலைஞர்களும் திருவாளர்களான நாசர்   இஜாஸ், குஞ்சிமுட்டி சோறு புகழ் முஹம்மது  நஸீம் போன்ற வளர்ந்து வரும் கலைஞர்களும் மற்றும் இவ்விடத்தில் பெயர் குறிப்பிடப் படாத பல கலைஞர்களும் சான்றாக அமைக்கின்றனர்.

மேலே பெயர் குறிப்பிடப் படாதவர்கள் உட்பட அனைவரும் கிண்ணியாவின்  இலக்கிய பணியில் பெருமளவு பங்காளிகளாகவே திகழ்கின்றனர்.
மேலே பெயர் குறிப்பிடப் படாதவர்களுள் மிக முக்கியமான ஒருவர்தான் ஜனாப். ஏ. நஸ்புள்ளாஹ் அவர்கள். இவரை விடுத்து கிண்ணியாவின் இலக்கிய வரலாற்றை தொகுத்து விட முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

கலாபூசணம் ஜனாப் முஹம்மது அலி அவர்கள் ஒரு பதிவின் பின்னூட்டத்தில் கீழே மேற்கோள் இட்டுக்கட்டிய வரிகள் மூலம் கிண்ணியாவில் இலக்கிய வரலாற்றின் நவீன கவி புனைவதிலும் கவிஞர் நஸ்புள்ளாஹ் அவர்களின் பங்கினை இலகுவாக அறிய முடிகிறது.

"முஜாரத், நஸ்புள்ளா
இவ்விரு கவிதை மகன்களின் கவிதை நகர்ச்சியில் முதிரச்சி தெரிகிறது. அத்துடன் நவீன பாவுக்கான அழகியலும் விரிகிறது." (கலாபூசணம் ஜனாப் முஹம்மது அலி அவர்களின் பின்னூட்டம்)

1974ம் வருடம் கிண்ணியாவில் பிறந்த ஜனாப் ஏ. நஸ்புள்ளாஹ் அவர்கள் கிண்ணியா அரபா மகாவித்தியாலயத்தில் தனது கல்வியினை தொடர்ந்த இவர் உயர்தரம் வரை கல்வி கற்று தற்போது நீர் வளங்கள் மற்றும் வடிகால் அமைப்புச் சபையில் கடமையாற்றி வருகின்றார். அவர் தனது தொழிலிலும் பார்க்க இலக்கியத்தினையே அதிகமாக நேசித்து இருக்கின்றார் என்பது அவரை அறிந்த அனைவரும் அறிந்ததொன்றே. அவரைப் பற்றி அறிந்திராத மற்றும் தெரிந்திராத அனைவருக்கும் கீழே இலக்கங்கள் குறிக்கப்பட்டு சுட்டிக்காட்டப் பட்டுள்ள அவரது படைப்புகள் விளக்கமளிக்கும்.

(கவிஞர் ஜனாப் ஏ.நஸ்புள்ளாஹ் அவர்களது புனைவில் உண்டான வெளியீடுகள்)
1. துளியுண்டு புன்னகைத்து - 2003
2. நதிகள் தேடும் சூரிய சவுக்காரம் - 2009
3. கனவுகளுக்கு மரணம் உண்டு - 2011
4. காவி நகரம் - 2013
5. ஆதாமின் ஆப்பிள் - 2014
6. இங்கே சைத்தான் இல்லை - 2015
7. ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர் - 2017
8. மின்மினிகளின் நகரம் - 2017
9. ஆகாய வீதி - 2018

மேட்குறிப்பிட்ட தொகுப்புக்கள் மாத்திரமின்றி இதுவரை தொகுக்கப் படாமல் உள்ள இன்னும் பல கவிதைகளையும் இவர் படைத்துள்ளார். அதுமட்டுமன்றி இவரது காவி நகரம் என்ற சிறுகதைத் தொகுதிக்கு பேனா பதிப்பகத்தின் 2014ம் ஆண்டிற்கான விருது வழங்கப்பட்டது.

மேலும், சிறிதும் தலைக்கனம் அற்றவரான இவர் ஏனைய கவிஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளின் படைப்புக்களை விவரணம் செய்வது, ஏனையோருக்கு எடுத்தியம்புவது போன்ற ஊக்குவிப்புக்களை செய்வது மட்டுமல்லாமல் வாழ்த்துவதற்கும் தவறி விடவில்லை.

இப்பதிவின் தொடர்ச்சியாக பல தொடர்களுக்கு 2017ம் வருடம் தனது 7வது நூலாக  இவரினால் வெளியிடப்பட்ட "ஹிட்லர் சிலருக்குப் பிடிக்காத பெயர்" என்ற கவிதைத் தொகுதியின் கவிதைகளையும் ஒரு வாசகனாக அவற்றிற்கான எனது விமர்சனங்களையும் தொகுத்து வழங்கவுள்ளேன்.

கவிஞர் ஜனாப் ஏ. நஸ்புள்ளாஹ் அவர்கள் இந்நூலினுள் நுழையும் முன்பதாக தனது 7வது நூலிற்காக உதவியவர்களினை மறந்து விடாமல் மனித இயல்பினில் மிகவும் போற்றத்தக்க விடையமான நன்றி நவிழ்த்தலுடனேயே எம்மை உள்ளே அழைத்துச் செல்கிறார்.

(நூலினூடாக நன்றி நவிழ்தலில் குறிப்பிடப் பட்ட பெயர்கள் "தோழர் பழனி நித்யன் (இந்தியா), ஜே.பிரோஸ்க்கான், கிண்ணியா சபருல்லாஹ், ஏ.எம்.எம்.அலி, ஏ.சீ.எம்.இப்ராஹீம் (சட்டத்தரணி), எம்.எம்.அலி அக்பர், கலாநிதி கே.எம்.எம்.இக்பால் மற்றும் நூலகர் எம்.ரீ.சபருல்லாஹ்கான், நேயம் நியாஸ், வீ.எம்.றைஸ்த்தீன், ஏ.கே.முஜாராத், நாசர் இஜாஸ், எம்.ரீ.சஜாத்.)

தொடர்ச்சியாக,
"இது எனதும் ஹிட்லரினதும் கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்களுக்கு" என்ற வாசகத்தை அழுத்தமாக கூறுவதன் மூலம் பாத்திர நாயகன் ஹிட்லரை வேறு கோணத்திலிருந்து கண்காணித்து விவரித்து கவிகளை வடித்துள்ளார் என்றே எண்ணத் தோன்றுகின்றது.

ஹிட்லரின் சிறுபராய வாழ்க்கையை நாம் அனைவரும் அறிந்தே ஆக வேண்டும் என்ற நோக்கிலோ என்னமோ முதல் தலைப்பாக "குழந்தை ஹிட்லர்" என்று தனது முதலாவது அத்தியாயத்தை மன்னிக்கவும் ஹிட்லரின் முதலாவது அத்தியாயத்தை ஆரம்பம் செய்துள்ளார்.

"குழந்தை ஹிட்லர்"

தொடரும்...


குறிப்பு: 1. இலக்கியர்களே! எழுத்துப் பிழைகள், பொருட் பிழைகள் ஏதேனும் இருப்பின் முதற்கண் தயவுடன் என்னை மன்னியுங்கள். அத்தோடு நின்று விடாமல் பிழைகளையும் சற்றே தெளிவு படுத்தி விடுங்கள்.

2. முழுக்க முழுக்க எனது சிந்தனைகளுக்கு உதயமான விடயங்களை வைத்து மட்டுமே விவரணம் செய்யத்துளேன்.

-விவரணம்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
05-ஜூலை-2018.




No comments: