Wednesday, June 13, 2018

நான் திருடி இருக்கக் கூடாது.

Facebook Post



நேற்றைய தினம் நள்ளிரவு 12.00 மணி இருக்கக் கூடும்.
எவ்வாறு நேற்றைய பகலில் இருள் படர்ந்து-
இரவாக உருமாறிப் போனதோ,
அது போலவே கனவொன்று என் மீது படர்ந்து
என்னை இறுகத் தழுவி என்னையும்-
கனவாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருந்தது.
கனவு என்னை ஆட்கொள்ள ஆரம்பித்த போது
மெல்லிய கீறல் போன்ற சிறு ஒளிப்பிழம்பு-
ஊற்றொன்றிலிருந்து உருவானது.
கனவு என்னை ஆசையோடு ஆறத்தழுவி இருந்தாலும்,
எனக்கென்னமோ ஊற்றெடுத்து உருவான-
அந்த ஒளிப்பிழம்பின் மீதுதான் ஒரு ஈர்ப்பு உண்டாயிற்று.
உண்டான ஈர்ப்பின் பயன் ஒளிபிழம்பருகே -
சென்று, ஒரு பிடியளவு ஒளியினை-
யாரும் அறியாவண்ணம் கவர்ந்து எடுத்து
என் சட்டைப் பையினுள் ஒழித்து வைத்து விட்டேன்.
களவாடி ஒரு துண்டை நான் கவர்ந்து-
வந்ததற்கு ஒரு காரணமும் உண்டு.
என் குழந்தையின் மகிழ்விற்காய்
அவ்வொளியினை வைத்து
அழகான பறவையொன்று செய்து
கற்பனை மூலம் உயிர்கொடுத்து
அவள் இளைப்பாறும் தூளியினருகே
ஒளிர, ஒளிர, பறக்க விட வேண்டும்,
என்றஙஒரு எண்ணம் மிகுதியாக எண்ணில்-
ஆட்கொண்டதுதான் அதற்கான காரணம்.
விடிந்ததும் வீடு சேர்ந்தேன்...
களவாடி மறைத்து வைத்த
ஒரு பிடியளவு ஒளிப்பிழம்பை
ஆவலுடன் எடுக்கப் பார்த்தேன்...
ஆனால்,
கவர்ந்து வந்த- கையளவு ஒளிப்பிழம்பு
காணமால் போயிற்று,
கவலை மிகுதியுடன் தேடித் பார்த்தேன்...
எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
ஒருவேளை கவர்ந்த ஒளியை
கனவுலகிலேயே கை தவறி விட்டுவிட்டேனோ
என்று எண்ணுகையில்,
எடுத்து ஒழித்து வைத்த ஒளிப்பிழம்பு-
ஒளிரும் சக்தியற்றுக் கிடக்கின்றது என்றும்,
இருளில் மட்டுமே ஒளிரக் கூடிய அந்த ஒளி
ஒளி நிறைந்த இடங்களில் ஒளிராது என்றும்,
கனவுலகம் மட்டுமே அது-
ஒளிர்வதற்கு சாத்தியமான தளம் என்றும்,
என்னுள் அசரீரி ஒன்று அழுத்தமாய் தெளிவு படுத்தியது.
அப்பொழுதுதான் உணர்ந்தேன் நான்...
நான் திருடியிருக்கக் கூடாது என்பதை.
பாவம் இருளின் மத்தியில் -
எப்போதுமே ஒளிர்ந்து கொண்டிருந்த -
அந்த ஒளிப்பிழம்பு இப்போது
என்னால் ஒளியிழந்து கிடக்கிறது.
அந்த ஒளிப்பிழம்பு ஒருநிமிடமேனும்
ஒளியிழந்து கிடப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
ஆசையோடு கவர்ந்து அந்த ஒளிப்பிழம்பை
எடுத்த இடத்திலேயே மீண்டும்
வைத்து விடவேண்டும்.
அதற்கென இன்றைய தினம்
ஒளிமீது கொண்ட ஈர்ப்பை
விரும்பியோ விரும்பாமலோ
கனவின் மீது வைக்க வேண்டும்.
கனவோடு நான் கனவானாலும்
திருடியதை நான் திருப்பி வைத்து விட வேண்டும்.
-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஸ்ரப்
(கிண்ணியா)
04-Jun-2018



No comments: