Sunday, June 3, 2018

கனவினுள் நுழைந்து ஒரு கவிதையேனும் எழுதிவிட வேண்டும்.

Facebook Post



இன்றைய தலைப்புச் செய்தி...
என் அன்னையால் என் கனவு கலைக்கப்பட்டது!...

ஒரு இருண்ட நீண்ட இரவு அது...
அதனைக் கடக்கவென தேடித் பிடித்து 
ஒரு கனவினைக் கண்டெடுத்து
அந்த இரவைக் கடக்க முயல்கிறேன்...
அங்கு பலரும் அதனையே செய்து கொண்டிருந்தனர்.
திடீரென ஒரு எண்ணம் தோன்ற
இது வரை என்னால் இயலாத ஒன்றை
செய்ய முனைகிறேன்.
ஆம் அதேதான்...
கவிதைதான்...
கவிதைதான் எழுத முனைகிறேன்.
அருகில் இருந்த கொடியினில்
சில மல்லிகைகள் பறித்து தொட்டில் செய்தேன்,
காற்றினை நிறுத்தி தொட்டிலை
காற்றிலே கட்டி விட்டேன்,
அதில் ஏறி அமர்ந்தும் கொண்டேன்...
அமைதியாக அமர்ந்த படி
மிதந்து கொண்டிருந்த மேகத் துண்டொன்றை எடுத்து
விண்மீன்கள் வெளிச்சத் துணை கொண்டு
கவியெழுத விழைகிறேன்...
அப்போதுதான் உணர்ந்தேன்
எழுதுகோலை மறந்தேன் என்பதை,
யாரிடமாவது எழுதுகோல்
கடன் வாங்கும் முடிவுக்கு வந்தவனாய்
சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தேன்...
அங்கே தூரத்திலொரு இளைஞன்
துள்ளிக் குதித்து தூரிகை பிடித்து
கனவுகள் பலதை வரிகளாக்கி
வாசகம் படைத்துக் கொண்டிருந்தான்...
ஊர்ஜிதம் செய்து கொண்டேன்!
அது அவனேதான்... என்னைத் தூண்டியதும்
அவன்தான்... அதே ஏ. நஸ்புள்ளாஹ். தான்.
அவன் எதிர் திசையில் ஒரு பித்தனைக் கண்டேன்...
அவன் கவிப்பித்தனாய் இருக்கக் கூடும்... காரணம்
அவன் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தான்...
அவன் அருகில் செந்தமிழ் வீற்றிருக்கிறது,
உறுதியாகிவிட்டது!
அவன் அதே வன்னியூர் கிறுக்கன் தான்.
சற்று அருகே ஒரு பாலக(வல)னும் தவழ்ந்து கொண்டிருந்தான்...
அவனும் ஏதோ தகவல் திரட்டி-
கவி படைக்கவே முனைந்து கொண்டிருக்கின்றான்-
என்பதை இலகுவாக உணர முடிகிறது. காரணம்
அவனும் அதே இனம் தானே!
உமக்கு என்ன சந்தேகம்?
Nasar Ijas தான் அந்த பாலக(வல)ன்.
இப்பொழுது தீர்ந்ததா உம் சந்தேகம்?
இவர்கள் யாரிடமேனும் ஒரு பேனா பெற்றுவிடலாம்-
என நகர்கின்றேன்... என் நகர்தலிலும் வேகமாய்
சூரியன் துயில் கலைகிறான் என்பதை
பொழுது புலரலின் சூடு தேகத்திடம் சொன்னது...
என் வேகத்தினை அதிகரிக்கிறேன்...
இன்றைய நாளின் தலைப்புச் செய்தியாய்...
என் அன்னை என் கனவினை கலைத்துச் சென்றுவிட்டாள்.
இனி மீண்டும் ஒரு இருள் நுழைந்து,
கனவின் வழியே அந்த இரவினையும் கடந்து விடவேண்டும்...
இப்பொழுதே பேனாவை பத்திரப் படுத்துகிறேன்...
கனவைக் கடக்கும் போது அம்-மூவரையும் காணவும் வேண்டும்.
முக்கியமாக 
அடுத்த இரவினிலேனும் ஒரு கவிதையேனும்
படைத்திடவும் வேண்டும்.

-நன்றி-

-வரிகள்-
முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
04-Jan-2018




No comments: