Monday, June 4, 2018

ஒளிரும் தேசம்

அடர்ந்த இரவு அது,
ஆழ்ந்து உறங்கிவிட்டேன்.
பனிபடர்ந்த பிரதேசமாக இருக்கவேண்டும்,
இல்லை பனி தேசமாகவும் இருக்கக்கூடும் -
என்பதை என் உடல் உறைவிலிருந்து-
உணரக் கிடைத்தது.
குளிரைக் குறைக்குமளவு என்னிடம் சக்தியுமில்லை,
அதே குளிரை தடுக்குமளவு ஆடைகளும் -இருக்கவில்லை.
அணிந்திருந்த துனிகளையே இழுத்து மூடிக்கொண்டு
மெல்ல நகர்கிறேன்,
தூரத்தில் - ஒளிர்ந்து கொண்டிருந்த -
ஒளியினை நோக்கி...
நிலவின் தோன்றலாய் -
இருக்கவேண்டும் அன்றையதினம்,
கீறல் போன்ற பிறையொன்றை மட்டுமே
காணக் கிடைத்தது.
இருள் அடர்ந்திருந்தாலும்,
அங்கு செல்வதற்கான பாதையினை
என்னால் தெளிவாகவே காணமுடிந்தது.
நான் நடந்து செல்வதெற்கென
யாரோ இந்த பாதையை அமைத்திருக்கக்கூடும்,
அல்லது பலரும் அந்த வழியே
அதே ஒளியை நோக்கி
நடந்ததினாலேயே அந்தப் பாதை
உண்டாகியிருக்க வேண்டும்.
நான் நடக்கையிலே
என் கால்கள் செல்லும் வேகத்திற்கேற்ப
அருகிலிருந்த காளான்கள் ஒளிரத் தொடங்கின.
வானம்பாடியாக இருக்கவேண்டும் -
எனக்கு வழித்துணையாக வந்தது,
அவை என் பயணத்தை சிரமமற்றதாக்கின.
ஆச்சர்யத்துடன் முன்னோக்கி நகர்கிறேன்...
சற்று தொலைவைக் கடந்து தொடர்கையில்
எனக்கு நடந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
என்னை ஏற்றிச் செல்ல விசித்திர-
வாகனமொன்று தயாரானது,
வழுக்கும் தரையாக இருக்கக் கூடும்,
அவ்விடமிருந்து ஒரு நத்தையென்னை
சுமந்து செல்ல தயாரானது...
ஏறி அமர்ந்த நான் உல்லாசமாய் நகரலானேன்...

பார்ப்பதற்கு பல இருந்தும்,
என்சிந்தை முழுதும் ஒளிர்ந்துகொண்டிருந்த–
அந்த ஒளியை நோக்கியே இருந்தது
சொட்பதூரம் கடக்கையிலே
நீர் நிலையொன்று குறுக்கிட
நத்தை வாகனத்தோடு
பயணத்தை தொடர முடியாமல் போயிற்று.
என்ன ஒரு ஆச்சர்யம்,
எங்கிருந்தோ ஒரு மீன் வந்தது,
எனையழைத்து அந்நீரிணையைக்
கடக்கும் சூட்சமத்தைக் கூறி
கண்ணாடிக் குவளையொன்றை கையில் தந்தது..
அதனுள் என்னை ஏறி அமர்ந்துகொள்ள பணித்தது,
நான் அமர்ந்தபின் அருகிலிருந்த
அன்னம் எனை அக்கரை சேர்த்தது.
அக்கரையடைந்ததும் இன்னும் ஆச்சரியமானேன்.
ஒளிர்ந்துகொண்டிருந்த ஒளியை அடைய
ஒரு ஏணியில் ஏறிச் செல்லவேண்டியாயிற்று.
ஆனால் இங்கும் ஒரு அற்புதம்,
நான் அங்கு ஏணியில் ஏறிச்செல்லவில்லை,
மாறாக என்னை அங்கு ஏற்றிச் சென்றது.
பள பளக்கும் பளிங்கினாலான
வண்ணத்துப்பூச்சி என்னை
தூக்கிப் பறந்து சென்றது.
மேலே சென்றேன், மதி மயங்கிப் போனேன்,
அங்கே ஒரு தேசமிருந்தது,
இது வரை காணாத தேசமது.
அருகில் நெருங்கியதும்தான் தெரிந்தது,
ஒளிர்ந்து கொண்டிருந்தது சிறு ஒளியல்ல,
ஒளிர்ந்தது அந்த தேசமே,
அது ஒளிரும் தேசம்.
அது மின்மினிகளின் தேசம்.
ஒட்டு மொத்த மின்மினிகளும்
ஒன்றாய் இணைந்து குதூகலித்துக் கொண்டிருந்தன.
அவற்றின் ஒளிர்வில்
மிதமான கதகதப்பும் இருந்தது.
நான் தேடி வந்ததும் அந்த கதகதப்பை தானே...
அன்பால் வரவேற்கப் பட்டேன்,
விருந்தினர் அறையில் அமர்த்தப்பட்டேன்.
என்னை அமர்த்திய அறையில்
நட்சத்திரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன...
அமர்வதற்கு வழங்கப்பட்ட-
பறவையின் இறகுகளிலான
இருக்கையின் மென்மையை மென்மேலும்
மென்மையாக்கியது விரிக்கப் பட்டிருந்த
மேகத்துண்டுகளும் நிறைந்து கிடந்த பூக்களும்...
என்வருகையால் அவர்கள் மகிழ்ந்ததாகவும்,
அவர்களின் மகிழ்வினை கொண்டாட
விழா கொண்டாட உள்ளதாகவும்
அவ்விழாவிற்கு என்னைக் கலந்து கொள்ளுமாறும்
அறிவிப்புக் கிடைக்கப் பெற்றது...
நான் தயாரான சமயம்,
எங்கிருந்தோ சிறு தூரல்மழை...
பனி தேசம் கரையாத தொடங்கியது,
ஒளிரும் தேசம் இருளத் தொடங்கியது,
பொழுதும் புலரத் தொடங்கியது,
என் அன்பு அன்னை தெளித்த நீரினால்
என் கனவும் கலையத் தொடங்கியது.
கலைந்த கனவின் கலக்கத்தில் தூங்கினால்
தூக்கம்தான் வருமா?
தூக்கம்தான் வந்தாலும் கலைந்த
கனவின் மிகுதிதான் தொடருமா?
அங்ஙனம் கனவு தொடர்ந்தாலும்,
ஒளிரும் உலகில் சேர்ந்திடத்தான் முடியுமா?
இல்லை, அங்கு வாழ்ந்திடத்தான் கிடைக்குமா?

-நன்றி-

-வரிகள்-

முஹம்மது இம்ரான் அஷ்ரப்
(கிண்ணியா)
09-Feb-2018




No comments: